தமிழ்நாடு செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை- உயர்நீதிமன்ற கிளை

Published On 2025-06-20 14:40 IST   |   Update On 2025-06-20 14:46:00 IST
  • அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
  • வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை முருக பக்தர் மாநாடு நாளை மறுநாள் (22-ந்தேதி, ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு இவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, "இதுபோன்று அதிக அளவில் பொது மக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்து வதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் உள்ளது" என தெரிவித்தார்.

மேலும், "இந்த உத்தரவு என்பது மாநாடுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை, வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாநாடுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும்.

இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News