கொங்கு மாவட்ட மக்களுக்கு நற்செய்தி... எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை
- பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
- 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.
கோவை:
தெற்கு ரெயில்வேயில் தற்போது 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற விரைவு ரெயில்களை காட்டிலும் வேகமாகவும், சொகுசாகவும் இருப்பதால் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் தென்மேற்கு ரெயில்வே சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழகம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு புதிய வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. வருகிற 7-ந் தேதி முதல் இதன் சேவை தொடங்குகிறது.
இந்த ரெயிலை சேலம், ஈரோடு, கோவை, திருப்பூரில் நின்று செல்லுமாறு இயக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள்படி இந்த 4 ரெயில்களிலும் புதிய வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெங்களூரு-எர்ணாகுளம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி புதன்கிழமை தவிர தினந்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு-எர்ணாகுளம் வந்தே பாரத் ரெயில் (எண் 26651) 5.20 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 8.15 மணிக்கு சேலம், 9 மணிக்கு ஈரோடு, 9.47 மணிக்கு திருப்பூர், 10.35 மணிக்கு கோவை, 11.30 மணிக்கு பாலக்காடு, 12.30 மணிக்கு திருச்சூர், 1.50 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறுமார்க்கமாக புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் (எண் 26652) 3.20 மணிக்கு திருச்சூர், 4.35 மணிக்கு பாலக்காடு, 5.23 மணிக்கு கோவை, 6.05 மணிக்கு திருப்பூர், 6.50 மணிக்கு ஈரோடு, 7.20 மணிக்கு சேலம், 10.25 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், 11 மணிக்கு பெங்களூரு நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.