தமிழ்நாடு செய்திகள்

பாட புத்தகத்தில் மாற்றம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் - வைகோ கண்டனம்

Published On 2025-07-17 14:56 IST   |   Update On 2025-07-17 14:56:00 IST
  • புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது.
  • உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது.

8-ம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டது. சமூகத்தை ஆராய்தல், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பில் வந்துள்ள இந்த புத்தகத்தில் டெல்லி சுல்தான்கள், முகாலயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ சகாப்தத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்.சி.இ. ஆர்.டி.யின் பாடத் திட்டத்தில் முதலாவதாகும்.

புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. போர் மற்றும் ரத்தக் களரியை முதன்மையாக கொண்ட உணர்வு பூர்வமான மற்றும் வன் முறை நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்று உள்ளன. 13 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கிய அத்தியாயம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல், டெல்லி சுல்தான்களில் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, விஜயநகர பேரரசு, முகலாயர்கள், சீக்கியர்களின் எழுச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாடப்புத்தகத்தில் பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவுரங்கசீப் கோவில்களையும், குருத்வா ராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும், அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ. ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News