தமிழ்நாடு செய்திகள்

கீழடி அகழாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய முயற்சி - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

Published On 2025-06-11 11:32 IST   |   Update On 2025-06-11 11:32:00 IST
  • 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது.
  • முதல் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கீழடியில் 1, 2, 3-ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2-ம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2-ம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட்டில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 14 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமான தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்க ஏராளமான நடைமுறைகள் உள்ளன. இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று கூறியிருக்கிறார். பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News