தன்மானத்தை அடகு வைத்து விட்டு திமுக-வில் இணைந்தார்: மனோஜ் பாண்டியனுக்கு வைகைச்செல்வன் பதிலடி
- தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார்.
- திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் மனோஜ் பாண்டியன். எடப்பாடி பழனிசாமி- ஓ. பன்னீர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டபோது ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார்.
திமுக-வில் இணைந்தது குறித்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைத்து கொண்ட போது என்னை அவர் முழு மன தோடு வரவேற்றார். நான் இன்று மாலை எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைக்காமல் தமிழகத்தின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் முயற்சிகளை யும், அதனால் ஏற்படும் சோதனைகளையும் எதிர் கொண்டு தமிழக உரிமை களை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்த கொள்கைக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ அதே கொள்கையில் ஜெயலலிதாவும் பயணித்து வந்தார். ஆனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை வழி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உணர்வு களை மதிக்காத தலைவராக உள்ளார். பா.ஜனதா கட்சியுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னவர் பிறகு மீண்டும் எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை.
இதுபற்றி தொண்டர்கள் யாரிடமும் கருத்து கேட்கவில்லை. பா.ஜனதா கட்சியின் கிளை கழகம் போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. அ.தி.மு.க.வை அடகு வைத்து விட்டு செயல்படும் நிலை இன்று ஏற்பட்டுள்ளதால் அதில் இருந்து விலகி தி.மு.க.வில் தொண்டனாக பணியாற்ற வந்துள்ளேன்.
திராவிட கொள்கைகளை பின்பற்றும் இயக்கமாக தி.மு.க. விளங்குகிறது. வலிமையான தமிழகத்தை உருவாக்க கூடிய தலைவராக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்.
அ.தி.மு.க.வை தோற்றுவித்த தலைவரும், அம்மாவும் எந்த சூழ்நிலையிலும் கட்சியை அடகு வைக்கவில்லை. ஆனால் இன்றைய அ.தி.மு.க. வேறு ஒரு இயக்கத்தை நம்பி உள்ளது. எனவே நான் எஞ்சிய வாழ்க்கையை தி.மு.க.வில் பயணிக்க முடிவு செய்து உள்ளேன். இது நான் எடுத்த தீர்க்கமான முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மனோஜ் பாண்டியன் திமுக-வில் இணைந்தது குறித்து வைகைச்செல்வன் கூறியதாவது:-
தன்மானத்தை அடகு வைத்துவிட்டு திமுக-வில் மனோஜ் பாண்டியன் இணைந்துவிட்டார். திமுக-வில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் எம.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கலாம்.
இவ்வாறு வைகைச் செல்வன் தெரிவித்தார்.