வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 60 அடியை எட்டியது
- கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் லோயர் கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் கூடுதல் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து 60.04 அடியாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி 662 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி நீர் மட்டும் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் முழு கொள்ளளவான 71 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக நெல் சாகுபடிக்கு 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் 3608 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 128.50 அடியாக உள்ளது. 736 கனஅடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4374 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடியாக உள்ளது. 8 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 45.90 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
கூடலூர் 3.4, பெரியாறு அணை 3, தேக்கடி 2.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.