சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பல்நோக்கு மையம், முதல்வர் படைப்பகம்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்
- ராயப்பேட்டை பைகி ராப்ட் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.
- திருவல்லிக்கேணியில் 12 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் மற்றும் ரூ.1.87 கோடியில் புதிய குடியிருப்பு கட்டிடங்களை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை:
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
ராயப்பேட்டை பைகி ராப்ட் சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.12.37 கோடி மதிப்பீட்டில் 3 தளத்தில் பல்நோக்கு மையம் கட்டப்படுகிறது.
அதே போல் திருவல்லிக்கேணி ஜானிபாட்ஷா தெருவில் ரூ.1.87 கோடி மதிப்பில் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம், பாரதி சாலையில் ரூ.1.37 கோடி செலவில் முதல்வர் படைப்பகம் கட்டும் பணிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பார்த்தசாரதி கோவில் ரூ.77.50 லட்சம் செலவில் 3 குடியிருப்புகள் மற்றும் திருவல்லிக்கேணி பி.பி.கோவில் தெருவில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் 12 குடியிருப்புகள் கொண்ட கட்டிடம் மற்றும் ரூ.1.87 கோடியில் புதிய குடியிருப்பு கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் போர் பதற்றம் சூழலில் காஷ்மீரில் சிக்கிய 41 தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேட்டனர்.
அதற்கு உதயநிதி பதில் கூறும்போது, காஷ்மீரில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.