நித்திரையில் இருக்கும் தமிழா! - தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத த.வெ.க. தலைவர் விஜய்
- விஜய், தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காமல் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- கடந்த தைப்பொங்கல் நாளன்று இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்று விஜய் பதிவிட்டிருந்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் சித்திரை திருநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், "அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
விஜய் அவர்கள் திராவிடத்தை பின்பற்றி, தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காமல் சித்திரை திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
திக, திமுக, விசிக, பாமக, தமிழ் தேசியர்கள் போல் சித்திரை 1-ஐ தமிழ் புத்தாண்டாக தமிழக வெற்றிக்கழகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த தைப்பொங்கல் நாளன்று இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்று விஜய் பதிவிட்டிருந்தார். ஆகவே விசுவாவசு ஆண்டுப்பிறப்பை தமிழ் ஆண்டுப்பிறப்பாக தமிழக வெற்றிக்கழகம் ஏற்கவில்லை. அதன் காரணமாக தான் விஜய் சித்திரை திருநாள் வாழ்த்து கூறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
1935 ஆம் ஆண்டு திருச்சியில் மறைமலை அடிகளார் தலைமையில் நடந்த தமிழர் மாட்டில் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை அந்த மாநாட்டில் பங்கேற்ற பெரியாரும் ஏற்றுக்கொண்டார்.
தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பதை வலியுறுத்தி, "நித்திரையில் இருக்கும் தமிழார் சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு. அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள். தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு" என்று பாரதிதாசன் பாடல் எழுதினார்.
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டு என்று மாற்றினார். இதனையடுத்து ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் சித்திரை 1 ஆம் தேதியை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.