தமிழ்நாடு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசுவது அழகல்ல: தம்பிதுரை எம்.பி.

Published On 2024-12-10 19:55 IST   |   Update On 2024-12-10 19:56:00 IST
  • தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல.
  • கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது.

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தம்பித்துரை கூறுகையில் "தமிழகத்தை காட்டிக் கொடுத்து விட்டேன் என்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசுவது அழகல்ல. கனிம வள சுரங்க விவகாரத்தில் மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்ற பிறகே ஆதரிக்கப்பட்டது" என்றார்.

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு பாராளுமன்ற ஆவணங்களே சாட்சி என்றும், முழு பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது எனவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.

மேலும் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.

அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத்திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது.

டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.

அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.

தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?

மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா?

இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும்- புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News