தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் சாரல் மழை- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Published On 2025-05-09 10:21 IST   |   Update On 2025-05-09 10:21:00 IST
  • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
  • பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், படகு குழாம், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கன மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News