தமிழ்நாடு செய்திகள்

இறைச்சி விலைகளை பொதுமக்கள் அறிய புதிய இணையதளம் - தமிழக அரசு தொடங்குகிறது

Published On 2025-06-27 12:41 IST   |   Update On 2025-06-27 12:41:00 IST
  • பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது.
  • ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும்.

சென்னை:

கால்நடை மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் என்.சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பால் பொருள்கள் மற்றும் கடல் சாா்ந்த உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில், அதிக பால்தரும் புதிய கலப்பின மாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனவே தமிழகத்தில் பால் மற்றும் கடல் சாா்ந்த உணவு பொருள்களை இறக்குமதி செய்யும் சூழல் பெரும்பாலும் வர வாய்ப்பில்லை. கால்நடை பராமரிப்பு சாா்ந்த மாணவர்களின் புதிய ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவிகள் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

தினசரி காய்கறி விலைகளைத் தெரிந்து கொள்வதைப்போல இறைச்சி வகைகளின் விலைகளையும் தெரிந்து கொள்ளும் வகையில், 'இறைச்சி விலை பலகை' என்ற ஒரு பிரத்யேக இணையதளம் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்மூலம் பல்வேறு சந்தைகளில் கால்நடைகளின் சந்தை விலை மற்றும் இருப்பு நிலவரத்தை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் வா்த்தகம் மேற்கொள்ள முடியும்.

மேலும், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் மற்றும் நாட்டுக்கோழி உள்ளிட்ட இறைச்சிகளுக்கான விலை பட்டியல் சந்தை வாரியாக தினசரி வெளியிடப்படும். இதன்மூலம் விலை ஏற்றத் தாழ்வுகளை தவிா்ப்பதோடு, சந்தையில் நியாயமான விலையை உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News