திருவண்ணாமலை கோவிலின் பெயர் மாற்றமா? - தமிழக அரசு விளக்கம்
- திருவண்ணாமலை கோவிலின் பெயர் அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர்.
சென்னை:
திருவண்ணாமலை கோவிலின் பெயர் படிப்படியாக அருணாசலேசுவரர் கோவில் என்று மாற்றப்படுவதாக ஒருவர் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இது முற்றிலும் பொய்யான தகவல். திருவண்ணாமலை கோவில் இணை கமிஷனர் அளித்துள்ள விளக்கத்தில், ''1940-ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாஜக் காரியதரிசி ம.பாலசுப்பிரமணியனால் எழுதப்பட்ட 'திருவண்ணாமலை வரலாறு' என்ற நூலில் இந்த கோவிலின் பெயர் ஸ்ரீ அருணாசலேசுவரர் தேவஸ்தானம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகவே பக்தர்கள் அண்ணாமலையார் கோவில், அருணாசலேசுவரர் கோவில் ஆகிய பெயர்களில் அழைத்து வருகின்றனர். கோவில் பெயர் மாற்றப்படுவதாகப் பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானது" என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை போலீஸ்காரர் பிடித்து இழுத்ததால் கீழே விழுந்த குழந்தை மீது வேன் மோதி உயிரிழந்த சம்பவம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நிகழ்ந்தது. ஆனால், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக பரவிய பதிவுக்கும், தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.