தமிழ்நாடு செய்திகள்

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இன்று முதல் இயக்கம்: 1,440 பேர் பயணிக்கலாம்

Published On 2025-09-24 10:18 IST   |   Update On 2025-09-24 10:18:00 IST
  • 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.
  • பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நெல்லை:

அதிநவீன சொகுசு வசதியுடனும் விரைவாக செல்லும் நோக்கிலும் நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

காலை 6.05 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைந்து விடும்.

வழக்கமாக மற்ற அதிவேகமாக செல்லும் ரெயில்களான நெல்லை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் கூட 10 மணி நேரத்தில் தான் சென்னையை சென்றடையும். ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் 7¾ மணி நேரத்தில் சென்றடைந்து விடும். இதன் காரணமாக இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதிநவீன வசதி அதிவேகம் உள்ளிட்ட காரணங்களால் பொது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் 16 பெட்டிகளை கொண்ட ரெயிலாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டது.

தென்னக ரெயில்வேயில் அதிக வசூலை வழங்கக்கூடிய நிலையங்களாக இருக்கும் நெல்லை, மதுரை உள்ளிட்ட நிலையங்கள் இருக்கும் நிலையில் 16 பெட்டிகளுக்கும் கூடுதல் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகும் பயணிக்க காத்திருப்போர் பட்டியல் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே இருந்ததால் இந்த ரெயிலை 20 பெட்டிகளை கொண்ட புதிய ரெயிலாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனை பரிசீலித்த ரெயில்வே நிர்வாகம் சென்னை ஐ.சி.எப்.இல். தயாரான புதிய 20 பட்டியலை கொண்ட காவி மற்றும் கிரே நிறத்திலான ரெயிலை நெல்லைக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அனுப்பி வைத்தது. நெல்லை ரெயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. அதன் அடிப்படையில் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

16 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இருக்கும்போது 1128 பயணிகள் இதில் அதிகபட்சமாக பயணித்த நிலையில் 20 பெட்டிகள் கொண்ட புதிய ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை 1440 ஆக உயரும்.

ஆயுத பூஜை, விஐயதசமி, தசரா திருவிழா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் 20 பெட்டிகளை கொண்ட 1440 பயணிகள் பயணிக்க கூடிய ரெயிலை இயக்கியது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News