அரியூர்பட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மீன்பிடி திருவிழா
- விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சருகுவலையபட்டி ஊராட்சியை சேர்ந்தது அரியூர்பட்டி. இங்கு மோகினி சாத்தான் கண்மாய் உள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாயி பணிகளை முடிந்த பின்பு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மீன்பிடித் திருவிழா விவசாய பணிகள் முடிந்த பின்பு இன்று காலை 5 மணி அளவில் தொடங்கியது. இந்த மீன் பிடி திருவிழாவில் பங்கேற்க சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமன்றி சிவகங்கை, திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
முதலில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத் துண்டு வீச, சுற்றி இருந்த மக்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு இறங்கி தங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, குத்தா போன்ற ஏராளமான மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தி மீன்களை போட்டி போட்டு பிடித்தனர்.
இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு ஜிலேபி, வீரா மீன்கள் என சிறிய ரக மீன்கள் முதல் 2 கிலோ, 3 கிலோ வரை உள்ள பெரிய மீன்கள் பிடிபட்டது. பிடித்த மீன்களை இப்பகுதி மக்கள் விற்பனை செய்யாமல் தங்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து சமைத்து சாமி கும்பிட்டு சாப்பிடுவது வழக்கமாய் உள்ளது.
இப்படி செய்வது மூலம் வருங்காலங்களில் மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்கும் என்பதை பகுதி மக்களின் தொடர் நம்பிக்கையாக உள்ளது. இத்திருவிழாவில் ஜாதி மத பாகுபாடு இன்றி சமத்துவமாய் நடைபெறும் ஒரு சமத்துவ திருவிழாவாக நடைபெற்றது.