தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. தனது பலத்தை குறைத்து மதிப்பிடுகிறது - திருமாவளவன்

Published On 2025-05-01 14:56 IST   |   Update On 2025-05-01 14:56:00 IST
  • அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது.
  • அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபைக் கூட்டத்தில் வருகிற மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதற்கு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.

இது மகிழ்ச்சி அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்று பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை நாடு அறியும். பீகார் தேர்தல் பரபரப்புக்கு இடையில் மத்திய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

எனவே இது பீகார் சட்டசபை தேர்தலுக்கான ஒரு அவசர நிலைப்பாடாகத்தான் தெரிகிறது. பீகார் சட்டசபை தேர்தலுக்காகத்தான் இந்த நிலைப்பாடு என்றாலும் கூட இதனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்.

வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் எத்தனை முனை போட்டி நடந்தாலும் இரு முனை போட்டிதான் உண்மையான போட்டியாக இருக்க முடியும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் மக்கள் செல்வாக்கு பெற்று உள்ள கட்சிகள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அ.தி.மு.க. தன்னுடைய பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகதான் நான் பார்க்கிறேன்.

அ.தி.மு.க. ஏற்கனவே 2021-ம் ஆண்டே பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து படிப்பினை பெற்று இருக்கிறது. மறுபடியும் அதே பிழையை அது செய்கிறது.

அ.தி.மு.க. தனித்து நின்றால் கூட அந்த வாக்கு வலிமை குன்ற போவதில்லை. அதை அ.தி.மு.க. உணராமல் இருக்கிறது என்பதுதான் இங்கே குறிப்பிடத்தக்க ஒன்று.

எனவே எத்தனை அணிகள் இங்கே உருவானாலும் கூட தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாகத்தான் 2026 சட்டசபை தேர்தல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News