கடவுளை கேலி செய்துவிட்டு மதசார்பின்மை என்கிறார்கள்- பவன் கல்யாண்
- உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.
- எனது நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது.
மதுரையில் பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.
எனது நம்பிக்கையை கொண்டாட உரிமை உள்ளது. அதை நீங்கள் கேள்வி கேட்க முடியுமா? என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.
உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். அவருக்காக நாம் இங்கு வந்துள்ளோம். நமது அறம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆழமாக இருந்தது. இனியும் இருக்கும்.
ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்சினை. மதவாதி என சொல்கிறார்கள். மாநாட்டை உ.பி.யில் நடத்தலாமே என கேட்கிறார்கள். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது.
என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர்.
முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் நன்றியை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.