தமிழ்நாடு செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில், டம்ளர்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்- ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்

Published On 2025-07-02 14:45 IST   |   Update On 2025-07-02 14:45:00 IST
  • கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கோவை:

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள், சுற்றுப்புற சூழல்களில் மாசுக்களாக கலந்துள்ள பிளாஸ்டிக்துகள், மனிதர்களின் ரத்தத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மனிதர்களுக்கு ஏற்பட உள்ள நோய் பாதிப்பு குறித்த ஆராய்ச்சிகள் பல்வேறு தரப்பிலும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிறந்த குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா? என்பதை அறிய 3 மாதங்களுக்கு முன்பு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வை தொடங்கினர்.

குழந்தைகளிடம் ரத்தம் எடுக்காமல், வீணாகும் நஞ்சுக்கொடிகளை சேகரித்து, அதில் உள்ள ரத்தத்தை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஜி. மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லூரி ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் சுதா ராமலிங்கம் மற்றும் ஆராய்ச்சியாளர் சிவசெல்வக்குமார் கூறியதாவது:-

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் கெடுவது மட்டுமின்றி, மனிதர்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் நாங்கள் குழந்தைகளின் உடல்களில் பிளாஸ்டிக் நுண்துகள் உள்ளதா என்பதை அறிய முடிவு செய்தோம்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களது ஆராய்ச்சியை தொடங்கினோம். இதற்காக நாங்கள் குழந்தைகளிடம் இருந்து ரத்தம் எடுக்காமல், வீணாகக்கூடிய நஞ்சு கொடிகளை சேகரித்து அதில் உள்ள ரத்தம் மூலமாக எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஆராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

எங்களது ஆரம்ப கட்ட பரிசோதனையில் நாங்கள் நஞ்சுக்கொடிகளில் உள்ள ரத்தத்தை எல்.இ.எம்.எஸ் என்ற கருவி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது அந்த ஆய்வில், சிசுக்களின் நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் நுண்துகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.

எனவே கர்ப்ப காலத்தில் உள்ள தாய்மார்கள் உணவு உட்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகளவு பிளாஸ்டிக் பொருட்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்த வேண்டாம்.

இதேபோன்று விவசாயிகளின் உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதா? என்ற ஆராய்ச்சியையும் மேற்கொண்டோம்.

இதற்காக கோவை வேடப்பட்டி பகுதியில் 350 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் உடலில் பூச்சி கொல்லி மருந்து பயன்பாடு தாக்கம் உள்ளதா? என ஆய்வு செய்தோம். இந்த ஆய்வின் ஆறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் தன்மை, ரத்தத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம்.

மேலும் பூச்சிக்கொல்லி தாக்கம் காரணமாக, அவர்களது ரத்தத்தில் சர்க்கரை பாதிப்பு அதிகரித்து காணப்படுவதையும் இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்தோம்.

பூச்சிக்கொல்லி பாதிப்பு ரத்தத்தில் இருப்பதால் புற்றுநோய், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

நாங்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News