தமிழ்நாடு செய்திகள்

'மருங்கூர் அகழாய்வு' வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் என்பது உறுதி- தங்கம் தென்னரசு

Published On 2025-01-29 09:04 IST   |   Update On 2025-01-29 09:04:00 IST
  • அகழாய்வில் இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இரும்பின் தொன்மை குறித்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அறிவியல் ஆய்வு முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகிற்கு அறிவித்த ஒரு சில தினங்களில், கடலூர் மாவட்டம் மருங்கூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில், 257 செ.மீ. ஆழத்தில், 22.97 கிராம் எடையும், 13 செ.மீ நீளமும், 2.8 மி.மீ தடிமனும் கொண்ட இரும்பினாலான கத்தி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில், இரும்பினாலான அம்பு முனை, ஆணிகள் கிடைத்து வந்த நிலையில், தற்போது கத்தி கிடைத்துள்ளதன் மூலம், தொல் தமிழர் நாகரிகம் இரும்பின் பயன்பாடு அறிந்து, அதன் நுட்பங்களை கற்றுத்தேர்ந்திருந்தது புலப்படுகிறது.

இதற்கு முன்னர் மருங்கூர் அகழாய்வில், இராஜராஜ சோழன் காலத்துச் செம்பு காசுகள், அஞ்சனக் கோல், அகேட், சூதுபவளம், கண்ணாடி மணிகள், ரெளலட்டட் பானை ஓடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது இரும்பினாலான கத்தி கிடைத்துள்ளதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தளம் இது என்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News