தமிழ்நாடு செய்திகள்
null

சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ள தேஜஸ்வி.. முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Published On 2025-11-09 14:58 IST   |   Update On 2025-11-09 18:58:00 IST
  • தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.
  • கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 9) தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.

அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தம்பி தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.

தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம்.

இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News