தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் கோடை மழை இயல்பைவிட 97 சதவீதம் அதிகம்

Published On 2025-06-01 08:49 IST   |   Update On 2025-06-01 08:49:00 IST
  • அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
  • சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரியில் மார்ச் மாதம் 1-ந் தேதி தொடங்கி மே மாதம் 31-ந் தேதி வரையில் பெய்யக்கூடிய மழையை கோடை மழையாக கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கோடை மழை ஆரம்பத்தில் இருந்தே பல இடங்களில் பெய்ய தொடங்கியது. நேற்றுடன் கோடை மழை கணக்கு நிறைவு பெற்றது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்த காலகட்டங்களில் 12.4 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு இயல்பைவிட 97 சதவீதம் அதிகமாக அதாவது 24.5 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பைவிட 276 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக நெல்லை 260 சதவீதம் அதிகமாகவும், கடலூர் 226 சதவீதம் அதிகமாகவும் மழை பொழிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில், இயல்பைவிட 129 சதவீதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு வெப்ப அலைகளின் தாக்கமும், அதீத வெப்பத்தின் தாக்கமும் இல்லாத கோடை காலமாகவும், இயல்புக்கு அதிகமாக பதிவான கோடை மழையும் இந்த ஆண்டு இருந்து இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வரும் சூழலில், இனிவரும் நாட்களில் அதாவது வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழமை) வரை பருவமழையின் தீவிரம் சற்று குறைந்தே காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து 12-ந் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகவும், அதன் பின்னர் மீண்டும் பருவமழை 15-ந் தேதியில் இருந்து தீவிரம் அடைய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பருவமழை தொய்வடைவது, வறண்ட காற்றின் ஊடுருவல் காரணமாக இம்மாதம் முதல் வாரத்தில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்தே காணப்படும்.

அதே நேரத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலன மழையும் இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News