தமிழ்நாடு செய்திகள்

புத்தகப்பையில் கத்தியை மறைத்து வகுப்பறைக்கு கொண்டுவந்த மாணவர்- காரணத்தை கேட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி

Published On 2025-08-22 07:50 IST   |   Update On 2025-08-22 07:50:00 IST
  • ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
  • தலைமை ஆசிரியர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் நேற்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையில் புத்தகங்களுக்கு இடையே கத்தியை மறைத்து வைத்து கொண்டு வந்துள்ளார். இதை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். உடனே இதுகுறித்து தலைமை ஆசிரியர் திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து வந்து 9-ம் வகுப்பு மாணவனிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் அவனிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த மாணவரை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவர் இதற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவன் தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயத்தில் இந்த மாணவர் முன்னெச்சரிக்கையாக புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்து வகுப்புக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைக்கேட்டு ஆசிரியர்களும், சக மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாணவரை போலீசார் எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பள்ளிக்கு வந்த மாணவன் புத்தகப் பையில் கத்தியை மறைத்து வைத்திருந்த சம்பவம் திசையன்விளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News