தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது - சபாநாயகர் அப்பாவு

Published On 2025-05-27 14:57 IST   |   Update On 2025-05-27 14:57:00 IST
  • தி.மு.க. குறித்து பேசுபவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம்.
  • வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும்.

நெல்லை:

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகள் பதில் கூறிவிட்டார்கள். முதலமைச்சர் எப்போதும் இரட்டை வேடம் போட்டது கிடையாது. வேடம் போடுவது நடிகர்களுடைய செயல்.

பவன் கல்யாண் நடிகர். அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது. மக்களுக்கு தேவையானவற்றை அவர் செய்து கொடுத்துள்ளார்.

பல்வேறு கோவில்கள் குடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. ஓடாத தேர்கள் ஓடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. குறித்து பேசுபவர்களின் பார்வையில் கோளாறு இருக்கலாம். அறநிலையத் துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் நீதிமன்றத்திற்கு சென்று அதற்கு தடை வாங்கி விட்டார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு நடந்து வருகிறது. எந்த குறைபாடு இருந்தாலும் அதனை சுட்டிக்காட்டினால் உடனடியாக சரி செய்து கொடுக்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு தொடர்பாக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த கேள்விகள் ஒளிபரப்பு செய்ய வேண்டுமோ அதை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகிறோம். மீதமுள்ள செயல்பாடுகளை எப்படி நேரலை செய்யலாம் என கலந்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

எந்தெந்த வார்த்தைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பேச வேண்டும் என்பது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக நேரலை செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. அரசியல் தொடர்பான கருத்துக்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காக உன்னிப்பாக அந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உள்ள அரசை போன்று நாங்கள் செய்ய முடியாது என சொல்ல மாட்டோம். தமிழகம் சட்டப்பேரவை ஆரம்பித்து 104 ஆண்டு ஆகி உள்ளது. 1952-ம் ஆண்டுக்கு பிறகு சட்டப்பேரவையில் எந்தெந்த தலைவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை ஆன்லைனில் தேடினால் எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1921-52 வரை உள்ள சட்டமன்ற நடவடிக்கைகள் எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. வரும் சட்டமன்றம் முடிவதற்குள் முழுமையாக அனைத்து பேச்சுகளும் ஆன்லைனில் ஏற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News