ஏற்காட்டில் கடும் குளிர் - பொதுமக்கள் அவதி
- தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.
- பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் கனமழை கொட்டியது.
குறிப்பாக தலைவாசலை அடுத்த நத்தக்கரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இதே போல வீரகனூர், ஏற்காடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது. ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் மற்றும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை தூறலுடன் நின்று விட்டது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.