தமிழ்நாடு செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மாத்திரையை மாற்றி கொடுத்த மருந்தாளுனரால் பரபரப்பு

Published On 2025-04-29 10:15 IST   |   Update On 2025-04-29 10:15:00 IST
  • ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
  • மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

சேலம்:

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் தனது உறவினருக்கு மாத்திரை வாங்க சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் உள்ள மருந்தகத்திற்கு நேற்று மாலை வந்தார்.

தொடர்ந்து டாக்டர் எழுதி கொடுத்த மாத்திரை சீட்டை அங்கு பணியில் இருந்த மருந்தாளுனர் மாதேஸ் என்பவரிடம் கொடுத்தார். அப்போது ஹரி கொடுத்த மருந்து சீட்டை மருந்தாளுனர் கீழே போட்டு விட்டு வேறொரு நோயாளிக்கான மருந்து சீட்டை பார்த்து மாத்திரை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி மற்றும் அங்கு நின்றிருந்த பொது மக்கள் மருந்தாளுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது ஹரி மருந்தாளுனர் குடிபோதையில் இருப்பதாகவும், மாத்திரையை மாற்றி கொடுத்தது குறித்தும் கேட்ட போது பதில் சொல்லாமல் இருந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்ட மருந்தாளுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய படி கூச்சலிட்டார்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மருந்தாளுனர் மாதேசை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில், மருந்தாளுனர் குடிபோதையில் இருந்தாரா? என்பது குறித்து டாக்டர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவருக்கு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் என்று கருதுவதால் இன்று அவருக்கு டாக்டர்கள் குழுவினர் முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அதன் அடிப்படையில் இது தொடர்பாக மருத்துவ குழு மூலம் விரிவான விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News