திஷா கூட்டத்தில் பங்கேற்றது ஏன்?- செங்கோட்டையன் விளக்கம்
- விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை.
- தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது.
கோபி:
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திஷா கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் நடந்த திஷா கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினேன். விவசாயிகளுக்கு தேங்காய் விலை கட்டுப்படியாகவில்லை. அதனால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் மூலமாக கொள்முதல் செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்று வலியுறுத்தி பேசினேன்.
மேலும் கோபியில் புற வழிச்சாலை அமைப்பதற்கும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் தொல்லை அனுபவித்து வருகின்றனர். காட்டுப்பன்றியை சுடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும், தொகுப்பு வீடுகளில் அரசு ஒதுக்கும் நிதியானது குறைவாக உள்ளது. அதை அதிகப்படுத்தி தர வேண்டும்.
இன்னும் பல கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டத்தில் பேசி வந்தேன். எனக்கு அழைப்பு வந்ததால் கூட்டத்தில் கலந்து கொண்டேன். மக்களுக்காக பணி செய்வதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.