தமிழ்நாடு செய்திகள்

மூப்பனார் நினைவிடத்தை அகற்றும் திட்டம் இல்லை- வதந்தி பரப்புவதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Published On 2025-05-06 12:00 IST   |   Update On 2025-05-06 12:00:00 IST
  • கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார்.
  • அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

சென்னை:

சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரசுக்கு சொந்தமான 200 கிரவுண்டு இடம் உள்ளது. அதில் 20 கிரவுண்டு இடத்தில் காமராஜர் அரங்கம் அமைந்து உள்ளது.

ஒரு பக்கத்தில் மறைந்த ஜி.கே. மூப்பனார் நினைவிடம் உள்ளது. அந்த இடத்தில் தான் மூப்பனார் உடல் தகனம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வந்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

சுமார் 160 கிரவுண்டு நிலம் காலியாக கிடந்தது. அந்த இடம் தனியாருக்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அது காலாவதியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அந்த இடத்தில் காங்கிரஸ் மாநாட்டை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நடத்தினார். மேலும் தனியார் பயன்படுத்திய பாதையை செங்கல் கட்டி காங்கிரசார் அடைத்து விட்டார்கள். தனியாரை உள்ளே நுழையவும் அனுமதிக்கவில்லை. அந்த இடத்தை காங்கிரசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

காங்கிரஸ் கூட்டத்துக்கு வந்திருந்த அகில இந்திய காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது 18 கிரவுண்ட் இடத்தில் அமைந்து உள்ள மூப்பனார் நினைவிடத்தை அகற்றி விட்டு காங்கிரஸ் சொத்துடன் இணைக்க வேண்டும் என்று சிலர் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மூப்பனார் நினைவிடமும் அகற்றப்படலாம் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெ ருந்தகையை தொடர்பு கொண்டு கேட்டபோது கூறியதாவது:-

அந்த மாதிரி எந்த திட்டமும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.

Tags:    

Similar News