ஏரி நீர் திறப்பு குறித்து ஏன் தெரிவிக்கவில்லை?: அதிகாரிகளை கடிந்துகொண்ட செல்வபெருந்தகை
- ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தகவல் சொல்லவில்லை என்றார்.
- எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு என்னிடத்தில் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு சொல்லாமல் நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.