தி.மு.க. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை- சீமான்
- கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள்.
- கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பிரதமராக வாஜ்பாய், ஐ.கே. குஜ்ரால், வி.பி. சிங், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த தி.மு.க. 18 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்கு வகித்தது. அப்போதெல்லாம் தி.மு.க. கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலை கருத்தில் கொண்டும், மீனவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கச்சத்தீவு மீட்பு குறித்து தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகள் நாடகம் போடுகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இந்த பிரச்சனையை அவர்கள் கையில் எடுத்து உள்ளார்கள். கச்சத்தீவை மீட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
இந்துக்களின் வாக்குகளை பெறுவதற்காக பா.ஜ.க. இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள், சிக்கல்கள் உள்ள நிலையில் வக்பு பிரச்சனை தேவையானது தானா? திராவிட ஆட்சியிலும் வக்பு வாரிய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
46 ஆண்டுகளாக மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் கட்டாமல் இப்போது வாக்குகளுக்காக மணிமண்டபம் கட்டுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.