தலைமை பதவியை எட்டி பிடிக்கும் 2-வது பெண் அதிகாரி: புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சீமா அகர்வாலுக்கு வாய்ப்பு
- தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.
சென்னை:
தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் சங்கர் ஜிவால், அடுத்த மாதம் 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து அடுத்த டி.ஜி.பி.யை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்காக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் தற்போதைய டி.ஜி.பி. ஆகியோர் அடுத்த மாதம் டெல்லி செல்ல உள்ளனர்.
டெல்லியில் யூ.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழக அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளில் 3 பேரின் பெயர் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக கேடர் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக உள்ள 10 பேர் தற்போது டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளனர்.
இவர்களில் மத்திய அயல் பணியில் டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ள சஞ்சய் அரோரா இந்த மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இவரை தவிர்த்து சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்திப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள், மகேஷ் குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் வான்கடே மற்றும் சஞ்சய் மாத்தூர் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
6 மாதத்திற்குள் ஓய்வு பெறும் அதிகாரிகளை டி. ஜி.பி. பட்டியலில் சேர்க்க முடியாது என்பது யூபிஎஸ்சி விதிகளில் ஒன்றாகும்.
இதனால் விரைவில் ஓய்வு பெற உள்ள அபய்குமார் சிங்கின் பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பும் பட்டியலில் இடம்பெறு வதற்கு வாய்ப்பு இல்லை.
மீதமுள்ள 8 பேரில் 1990-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சீமா அகர்வால், 1992 பேட்ச் அதிகாரிகள் ராஜீவ் குமார், சந்தீப்ராய் ரத்தோர் உட்பட 8 அதிகாரிகள் பட்டியல் விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.
இதற்கு முன்பு, 30 ஆண்டுகள் காவல் துறையில் பணி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்தப் பட்டியலில் சேர்வதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். அதன்படி சீனியர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்று வந்தனர்.
ஆனால் மத்திய உள்துறையின் புதிய விதிகளின் படி, 16-வது ஊதிய குழு அட்டவணையில் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள அனைவருமே டி.ஜி.பி. பணியிடத்திற்கு தகுதியுடையவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள விதிகளின் படி, மாநில அரசு கொடுக்கும் பட்டியலில், சீனியாரிட்டி அடிப்படையில் 3 அதிகாரிகளை யூ.பி.எஸ்.சி. தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் வழங்கும். அவர்களில் ஒருவரை தமிழக அரசு டி.ஜி.பி.யாக தேர்வு செய்யும்.
இதன்படி தமிழக புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் சீமா அகர்வால் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்மூலம் டி.ஜி.பி. அந்தஸ்தை எட்டிப் பிடிக்கும் 2-வது பெண் அதிகாரியாக சீமா அகர்வால் திகழ்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் ஏற்கனவே பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.