புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பு: தடுப்பு சுவர் கட்ட ரூ.20 லட்சம் ஒதுக்கீடு- விஜய் வசந்த் எம்.பி.
- குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கண்டன உரை.
- பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிந்துள்ளதாவது:-
புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்தோம். இங்கு, தடுப்பு சுவர் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரை தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினத்தில் அவர் நமது தாய் நாட்டிற்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
இந்திய அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.
நாகர்கோவில் பட்டு வளர்ப்பு அலகில் பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடங்கி வைத்தோம்.
பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வசந்த் & கோ கல்வி விருதுகள் 2025 இன்று குமரி மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
முளகுமூடு குழந்தை ஏசு மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.