பூப்பெய்த மாணவிக்கு நடந்த அவலம்: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்- பள்ளி நிர்வாகம் நடவடிக்கை
- மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
- கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.
இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.
மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், பூப்பெய்த மாணவியை தனியாக அமர வைத்து தேர்வு எழுத்த வைத்த விவகாரத்தை அடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தர் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.