சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் அவகாசம் - ஐகோர்ட் மதுரை கிளை
- தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
- வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரதது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அதே ஊரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜின் மனைவி ஜெயராணி ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, சாத்தான் குளம் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க மதுரை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை முடிக்க 3 மாதம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.