பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
- செம்மறி ஆடுகள் வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது.
- பல வருடங்களாக நடைபெறும் அய்யலூர் சந்தை தமிழக அளவில் பிரபலமானதாகும்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, நாட்டுக்கோழி, காய்கறிகள் மற்றும் மலை கிராமங்களில் விளையக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்க வருகின்றனர். அதிகாலையில் தொடங்கும் சந்தை சுமார் 10 மணி வரை நடைபெறும். கடந்த சில நாட்களாக குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த மாதம் 7ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் குர்பாணி கொடுப்பது வழக்கம்.
இதில் தாங்கள் உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுப்பது சிறப்பு அம்சமாகும். எனவே இதற்கான ஆடுகள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்து இன்று வியாபாரிகள் குவிந்தனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் அய்யலூர் சந்தை களைகட்டியது.
செம்மறி ஆடுகள் வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்டியதால் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ. 7500 முதல் ரூ.8000 வரை விற்பனையானது.
நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. இதனால் இன்று ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பல வருடங்களாக நடைபெறும் அய்யலூர் சந்தை தமிழக அளவில் பிரபலமானதாகும். ஆனால் பெரும்பாலும் சாலையிலேயே நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பயணிகள் உள்ளிட்டோர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். எனவே மாவட்ட கலெக்டர் நேரடியாக பார்வையிட்டு அய்யலூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.