தமிழ்நாடு செய்திகள்

நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும்- ரிதன்யாவின் தந்தை

Published On 2025-08-23 12:10 IST   |   Update On 2025-08-23 12:10:00 IST
  • எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
  • மகளை இழந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மூவரும் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது. எனவே மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் மூவருக்கும் நீதிபதி ஜெயசந்திரன் நிபந்தனை விதித்தார்.

மேலும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான இரு நபர் பிணையை அவிநாசி நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அவிநாசி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதையடுத்து நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "ரிதன்யா வழக்கு திருப்பூர் செசன்ஸ் கோர்டுக்கு வந்தது. அப்போது கவின் குடும்பத்தினர் பெயில் அப்ளிகேசன் போட்டிருந்தார்கள்... நாங்கள் தடை மனு போட்டிருந்தோம். செசன்ஸ் கோர்டில் பெயில் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அடுத்ததாக அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அங்கும் அவர்களுக்கு பெயில் வழங்கக்கூடாது என்று இடையிட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் 55 நாட்களுக்கு பிறகு, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், கவின் குடும்பத்தினருக்கு கண்டிசன் பெயில் கொடுத்துவிட்டனர். இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம். உலகத்தில் இருக்கும் எல்லா மக்களுக்கும் நான் சொல்லும் கருத்துக்கள் என்னவென்றால், என் மகளை இழந்துவிட்டேன். அந்த வேதனையில் இருந்து எப்படி வருவது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் பெண்களுக்கு சட்டத்தில் இவ்வளவு தான் வழியா.. இவ்வளவு தான் காலஅவகாசமா.. அப்படி என்று நினைக்கும் போது,வருத்தமாக இருக்கு. இதனை எப்படி சொல்வது என்று தெரியலை. நீதியரசர்களும் பார்த்து, தயவு கூர்ந்து, என் பெண்ணுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும். பெண்ணுக்கான நீதி கிடைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும் என்றார். 

Tags:    

Similar News