தமிழ்நாடு செய்திகள்

தங்க நகைகளை அடமானம் வைக்க ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் ஏழைகளை கடுமையாக பாதிக்கும்- அமைச்சர் அறிக்கை

Published On 2025-05-22 11:00 IST   |   Update On 2025-05-22 11:00:00 IST
  • புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.
  • நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும்

சென்னை:

அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும் பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.

குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5 சதவீதம் குறைத்து, 75 சதவீதம் தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும்.

அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.

அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதி முறையைக் கடந்த மாதம் ஆர்.பி.ஐ. கொண்டு வந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். ஆர்.பி.ஐ. உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News