குன்னூர் அருகே சாலையோரம் மண்சரிவை தடுக்கும் வகையில் மண் ஆணி அமைக்கும் பணி நடந்து வரும் காட்சி.
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நிலச்சரிவு அபாயம் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு
- மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
தென்னிந்திய கடலோர பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்துக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நிவாரண முகாம்களும் தயார் செய்யப்பட்டு உள்ளது.
மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். அவர்களுடன் தீயணைப்பு, வருவாய், காவல்துறையினரும் முகாமிட்டு உள்ளனர்.
மேலும் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. நீலகிரியில் நேற்றும், இன்றும் மழை மிதமான அளவிலேயே பெய்துள்ளது. மழை அதிகரிக்கும்பட்சத்தில் சுற்றுலாதலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளது.
மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அபாயகரமான பகுதிகளை 43 மண்டல குழுக்கள் கண்காணித்து வருகின்றனர். மழையின் தீவிரத்தை பொறுத்து சுற்றுலாதலங்களை மூடுவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு உடனடியாக அறிவிக்கப்படும். நீலகிரிக்கு சுற்றுலா வர திட்டமிடும் மற்றும் வந்துள்ள சுற்றுலாபயணிகள் மழை சம்பந்தமான வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்புகளை அறிந்து கொண்டு அதற்கேற்ப பயணங்களை திட்டமிட வேண்டும் என்றார்.
அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கமாண்டர் கோபிநாத் தலைமையில் நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். கமாண்டர் கோபிநாத் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் 283 அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் அபாயகரமான மரங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். பேரிடா் மீட்புக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா். நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்ல தயாா் நிலையில் உள்ளோம். தீயணைப்பு, வருவாய்த் துறையினருடன் இணைந்து அவ்வப்போது மழை வெள்ளம், இயற்கை சீற்றம் குறித்த தகவல்களை பகிா்ந்து வருவதால் அதி கனமழையை எதிா்கொள்ள தயாராக உள்ளோம் என்றாா்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பந்தலூரில் 7 செ.மீ. மழை கொட்டியது. அவலாஞ்சியில் 6 செ.மீ, சேரங்கோட்டில் 5, தேவாலாவில் 5, அப்பர்பவானியில் 4 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.
கோவை மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மழை பாதிப்பு அதிகம் இருக்கும் என கருதப்படும் வால்பாறை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர்.
மழை எச்சரிக்கையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் இன்றும், நாளையும் மூடப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பில்லூர் அணையில் நீர்மட்டம் உயரும்போது உபரிநீர் வெளியேற்றம் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட விளாமத்தூர் பகுதியில் இருந்து சமயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பா ளையம் உள்ளிட்ட ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 19 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 5 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.