தடை காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை காணலாம்.
கடல் கொந்தளிப்பு - ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 45 முதல் 65 கி.மீட்டர் வரை கடல் காற்று வீசக்கூடும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்படுகிறது. மேலும் வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட் விசைப்படகுகள், நாட்டு படகுகள், துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. மீன்பிடி தடையால் 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.