சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: 31 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
- 31 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், அடையார், மந்தைவெளி, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனிடையே, காலை 5 மணி முதல் தற்போது வரை நுங்கம்பாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 4-5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.