சென்னை-புறநகரில் 2-வது நாளாக தொடர் மழை
- மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
- காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது.
சென்னை:
பருவமழை தீவிரம் அடைந்து வருவதையொட்டி சென்னையில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் வானம் இருண்டு மழை பெய்ய தொடங்கி இன்று வரை மழை பெய்து கொண்டே இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் ஆந்திராவிற்கு திசை மாறி சென்றதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
இன்று காலையில் இருந்து சிறு சிறு தூறலாக மழை பெய்து வருவதால் மழை நீர் எங்கும் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியில் இருந்து டிராக்டரில் பொருத்தப்பட்ட மோட்டார் பம்ப் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டது.
பட்டாளம் தட்டான்குளம், கே.எம்.கார்டன் பகுதியில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினர். சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழை பெய்து உள்ளதால் மழை நீர் உடனடியாக வெளியேறியது. வழக்கமாக தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் கூட 2 நாட்கள் மழையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாநகராட்சி சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் ஓடியதால் போக்குவரத்து சீராக இருந்தது.
காற்று இல்லாமல் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து விழுவதும் குறைந்தது. மின்சார தடையும் ஏற்படாமல் சீரான வினியோகம் இருந்தது. எப்போதும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் கூட இந்த மழையால் பாதிப்பு இல்லை. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மழையிலும் தங்கள் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியிலும் விடிய விடிய மழை பெய்து வருகிறது. எண்ணூரில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பெய்து உள்ளது. கத்திவாக்கம் 10 செ.மீ, திருவொற்றியூர் விம்கோ நகர் 90 செ.மீ., மாதவரம், மணலி புதுநகர், மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது.
அதே போல பொன்னேரி அம்பத்தூர், மணலி, பேசின் பாலம், ஆவடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி துணை கமிஷனர் கூறும் போது, சென்னையில் சராசரியாக 3 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. அதனால் மழை நீர் பெரிய அளவில் எங்கும் தேங்கவில்லை. கனமழை பெய்யாததால் மழை நீர் உடனே வடிந்து விட்டது. மழையால் பாதிப்பு எதுவும் இல்லை" என்றார்.