தமிழ்நாடு செய்திகள்

தொடர் மழையால் ராமநாதபுரம் பஸ் நிலைய சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்.

ராமநாதபுரத்தில் 3-வது நாளாக தொடரும் மழை: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2025-10-17 14:44 IST   |   Update On 2025-10-17 14:44:00 IST
  • முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
  • தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை 3-வது நாளாக இன்று காலையும் நீடித்து வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் மிதமான முதல் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளிகளில் தண்ணீர் தேங்கியால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். தீபாவளி விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தண்ணீர் தேங்கி கிடந்த இடங்களில் நகராட்சி சேர்மன் கார்மேகம் அறிவுறுத்தலின்படி ஊழியர்கள் மோட்டார் எந்திரம் மூலம் தண்ணீரை அகற்றினர்.

இதேபோல் முதுகுளத்தூர், ஆர்.எஸ். மங்கலம், திருவாடானை, மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் வழக்கத்தை விட கடல் ஆக்ரோஷமாக காணப்பட்டது. அலைகள் பனைமர உயரத்துக்கு எழும்பின. வங்கக்கடலில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்துக்கு கடல் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

ராமேசுவரத்தில் அவ்வப்போது விட்டுவிட்டு பெய்யும் மழையால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் பலத்த காற்று வீசுவதால் சாலைகளை மணல்கள் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ராமநாதபுரம் 30, மண்டபம் 55.10, ராமேசுவரம் 7, பாம்பன் 21.50, தங்கச்சிமடம் 41.50, பள்ளமோர் குளம் 18.40, திருவாடானை 16, தொண்டி 34, வட்டாணம் 11.80, தீர்த்தண்ட தானம் 83.20, ஆர்.எஸ். மங்கலம் 52, பரமக்குடி 51.80, முதுகுளத்தூர் 29.70, கமுதி 21, கடலாடி, வாலிநோக்கம் 23.

மாவட்டத்தில் மொத்த மழையின் அளவு 519 மில்லி மீட்டர் ஆகும்.

Tags:    

Similar News