அடுத்தடுத்து கோவை வரும் பிரதமர் மோடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
- பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
கோவை:
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி கோவை வருகிறார். கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு நடக்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அவர் வருகிற 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வர உள்ளார். பின்னர் கொடிசியா செல்லும் அவர் இயற்கை விவசாய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரம் இயற்கை விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்
கோவைக்கு வரும் பிரதமருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி கோவைக்கு வர உள்ளார். அன்றைய தினம் அவர் கோவை மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார்.
கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
ஒருவார கால இடைவெளியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க கூடிய நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா பகுதி முழுவதையும் போலீசார் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த உள்ளனர். மேலும் பிரதமர் மோடி வந்து செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.