தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று பிற்பகுதியில் மழை தொடங்கும்- பிரதீப் ஜான் கணிப்பு

Published On 2024-12-11 07:57 IST   |   Update On 2024-12-11 07:57:00 IST
  • காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.
  • குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்றது. இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இன்று இது மேற்கு வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 14 ஆம் தேதி வரை மழைப்பொழிவு தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் புதுவையில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நன்கு அமைந்த இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்யும். விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்லும் திட்டமிருந்தால் 3 நாட்களுக்கு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழையும், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 



Tags:    

Similar News