தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி - சிபிஐ தரப்பு வழக்கறிஞர்

Published On 2025-05-13 14:42 IST   |   Update On 2025-05-13 14:42:00 IST
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்த நிலையில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

திருநாவுக்கரசு மற்றும் மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும் சதீஷூக்கு 3 ஆயுள் தண்டனையும், வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும் , ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனையும் , அருளானந்தம், அருண்குமார், பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை அடுத்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் சாட்சிகள் பலமாக இருப்பதால், குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தாலும் இந்த தண்டனை நிலைநிறுத்தப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News