தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்

Published On 2025-05-13 10:50 IST   |   Update On 2025-05-13 11:17:00 IST
  • வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது.
  • வழக்கில் கைதான 9 பேரும் சேலம் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

கோவை:

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேரும் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்படுவதற்காக சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பளிக்க நீதிபதி நந்தினி தேவி நீதிமன்றத்திற்கு வந்தார். இதையடுத்து கைதான 9 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் வெளியாகாத வகையில் மகளிர் கோர்ட் அறைக்கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. சிபிஐ அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டோர், வழக்கு தொடர்புடையோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை அறிவித்தார். அவர் அளித்த தீர்ப்பில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார்.

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நபர்களையும் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு அரசு தரப்பில் முறையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் 9 பேருக்கும் தரப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News