நாகர்கோவிலில் கோர்ட்டில் தகராறில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு
- வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). இவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.
இவர் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்குக்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது எனக் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .
அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்க கூறினார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த கோட்டார் போலீசார் அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் அருணாச்சலத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.