பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- 2 மாவட்டங்களுக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 100 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 79.50 அடியாக இருந்தது.
நேற்று காலை 11 மணியளவில் ஒரே நாளில் 7.50 அடி உயர்ந்து 87 அடியாக இருந்தது. மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவு 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 94.50 அடியை தாண்டியது.
இந்த நிலையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டிய பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கனஅடி வெளியேற்றப்படுகிறது.
அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.