கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்த நோயாளிகளை காணலாம்
காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு- கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்த நோயாளிகள்
- மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட அதிக அளவில் பனிமூட்டம் இருந்து வந்த நிலையில், சில நாட்களாக தொடர் மழையும் பெய்தது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், பொங்கல் பண்டிகை போகி அன்று அதிகளவில் பொருட்கள் எரிய வைத்ததால் மேலும் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் தற்போது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன
இதன் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிறுவர்கள் கைக்குழந்தைகள் உள்ளிட்டவர்களும் அதிக அளவில் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் நேரில் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தெந்த பகுதிகளில் அதிகளவில் இதுபோன்ற காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து காணப்படுகின்றதோ அதனை கண்டறிந்து அங்கு சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை இன்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.