தமிழ்நாடு செய்திகள்

வந்தே பாரத் ரெயிலில் தானியங்கி கதவு திறக்காததால் திண்டுக்கல்லில் பயணிகள் பரிதவிப்பு

Published On 2024-12-08 07:51 IST   |   Update On 2024-12-08 07:51:00 IST
  • திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது.
  • வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்:

சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரெயில் (வண்டி எண் 20665) வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்டது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். இந்தநிலையில் இரவு 7.45 மணி அளவில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தை, வந்தே பாரத் ரெயில் வந்தடைந்தது.

அப்போது ரெயிலில் உள்ள தானியங்கி கதவுகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. ஆனால் சி 4, சி 5 ஆகிய 2 பெட்டிகளின் கதவுகள் மட்டும் திறக்கப்படவில்லை. மற்ற கதவுகள் தானாக திறக்கப்பட்டது. அந்த பெட்டிகளில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிச்சென்றனர். ஆனால் சி 4, சி 5 ஆகிய பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் மட்டும் திண்டுக்கல்லில் இறங்க முடியாமல் ரெயில் பெட்டிக்குள்ளேயே தவித்தபடி நின்றனர்.

5 நிமிடங்களுக்கு மேலாகியும் கதவுகள் திறக்கப்படாததால் அந்த பெட்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர், ரெயில் என்ஜின் டிரைவரை தொடர்புகொண்டு பேச முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நகர தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகளில் ஒருவர், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.

இதற்கிடையே திண்டுக்கல் ரெயில் நிலையத்தை கடந்த ரெயில் சில கிலோ மீட்டர் தொலைவில் சென்று பாதி வழியில் நின்றது. தொடர்ந்து பயணிகளிடம் பேசிய டிக்கெட் பரிசோதகர், திண்டுக்கல் ரெயில் நிலையத்தைவிட்டு சில கிலோ மீட்டர் தூரம் ரெயில் கடந்து வந்துவிட்டது. எனவே கொடைரோடு ரெயில் நிலையத்தில் உங்களை இறக்கிவிட்டு, தூத்துக்குடியில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் ரெயிலில் கட்டணம் இன்றி திண்டுக்கல்லுக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

இதையடுத்து பயணிகள் சமாதானம் அடைந்தனர். பின்னர் இரவு 8.10 மணிக்கு வந்தே பாரத் ரெயில் கொடைரோடு ரெயில் நிலையத்தை அடைந்தது. வழக்கமாக கொடைரோடு ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லாது. ரெயில் பெட்டியில் சிக்கிய பயணிகளுக்காக நேற்று கொடைரோடு ரெயில் நிலையத்தில் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் ரெயிலில் இருந்து இறங்கியவர்களில் கைக்குழந்தையுடன் வந்த ஒரு பெண் மட்டும் வாடகை காரில் திண்டுக்கல் சென்றார். மற்ற 11 பேரையும், மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி ரெயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அவர்கள் இரவு 9.15 மணிக்கு திண்டுக்கல்லை வந்தடைந்தனர். நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட வந்தே பாரத் ரெயில் பெட்டிகளின் கதவு திறக்கப்படாததால் சுமார் 1½ மணி நேரம் பயணிகள் தவித்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News