பறக்கும் ரெயில்கள் குறைவாக இயக்கப்படுவதால் பயணிகள் தவிப்பு- மின்சார ரெயில்களில் செல்பவர்களும் அவதி
- 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
சென்னை:
சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஏற்கனவே 3 வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. இதனால் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சென்னை கடற்கரை-எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், மெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் எளிதாக செல்ல முடிகிறது. இதன் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்துள்ளது.
ஆனால் கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் மற்றும் கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 வழித்தடங்கள் இருந்தபோது கடற்கரை -வேளச்சேரி இடையேயான பறக்கும் ரெயில்கள் 10 முதல் 15 நிமிட வெளியில் இயக்கப்பட்டன. ஆனால் 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு 25 நிமிடத்திற்கு ஒருமுறை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
4-வது வழித்தடம் அமைக்கும் பணியால் ஏற்கனவே சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்துடன் பறக்கும் ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டோம். ஆனால் இப்போது 4-வது தண்டவாளம் அமைக்கப்பட்ட பின்னர் ரெயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் வழித்தடங்களில் மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. 4-வது வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதால் பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் பறக்கும் ரெயில் நடைமேடைகளின் அகலமும் குறைந்துள்ளது. இது நெரிசலான நேரங்களில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
4-வது பாதை அமைக்கப்பட்ட போது கோட்டை ரெயில் நிலையத்தில் விரைவு ரெயில்களுக்கான நடைமேடை அகற்றப்பட்டது இதையடுத்து சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான புறநகர் விரைவு ரெயில்கள், விரைவு பாதைக்கு பதிலாக தற்போது மெதுவான பாதைகளில் இயக்கப்படுகின்றன.
இதற்கு முன்பு செங்கல்பட்டு - எழும்பூர் - கடற்கரை வழித்த டத்தில் விரைவு பாதையில் விரைவு ரெயில் இயக்கப்பட்டதால் புறநகர் பகுதிகளில் இருந்து குறித்த நேரத்தில் சென்னைக்கு வேலைக்கு வர முடிந்தது. ஆனால் தற்போது விரைவு ரெயில்கள் மெதுவான பாதைகளில் இயக்கப்படுவதால் வேலைக்கு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.