இந்தியா

ஜிஎஸ்டி சீர்த்திருத்ததால் ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பு- இழப்பீடு கோரும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

Published On 2025-08-29 17:27 IST   |   Update On 2025-08-29 17:31:00 IST
  • ஜி.எஸ்.டி வரி விதிப்பில் செய்யப்படும் மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்.
  • மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத் திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவில் 2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலில் உள்ளது. தற்போது, 5 %, 12 %, 18 % மற்றும் 28% என நான்கு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில், "இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்" என்று தெரிவித்தார்.

அக்டோபர் 20 தீபாவளி வருகிறது. முன்னதாக செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே ஜிஎஸ்டி முறையில் என்ன மாதிரியான மாற்றங்களை மத்திய அரசு செய்ய உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 5 %, 12 %, 18 % , 28% என்ற 4 அடுக்கு வரி 2 அடுக்குகளாக குறைக்கப்பட உள்ளது.

அதாவது, 12, 28 சதவீத அடுக்குகள் நீக்கப்பட உள்ளன. 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத அடுக்குக்கும், 28 சதவீத அடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத அடுக்குக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆடம்பர மற்றும் புகையிலை, குட்கா, சிகரெட் போன்ற பொருட்கள் சிறப்பு வரி அடுக்கில் சேர்க்கப்பட்டு அவற்றுக்கு 40% வரி வசூலிக்கப்பட உள்ளது.

இந்த 40% வரி அடுக்கில் வெறும் 5-7 பொருள்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், இதில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் சேர்க்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் பெட்ரோலிய பொருட்கள் தொடர்ந்து ஜிஎஸ்டி வரம்புக்கு வெளியே வைத்து இருக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி சீர்த்திருத்தம் தொடர்பாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினர்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் - எட்டு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள், வரி விகிதக் குறைப்புக்குப் பிறகு வணிகங்கள் லாபம் ஈட்டுவதைத் தடுக்க ஒரு வழிமுறையை கோரினர். இதன் மூலம் நன்மைகள் சாமானிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்தனர்.

தற்போதைய வரி நிகழ்வைத் தக்கவைக்க முன்மொழியப்பட்ட 40 சதவீத விகிதத்துடன் கூடுதலாக புகையிலை, கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஆடம்பர பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்கள் பரிந்துரைத்தன. மேலும், இந்த வரியிலிருந்து கிடைக்கும் வருமானம் மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தன.

வரும் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் தலைமையிலான மற்றும் அனைத்து மாநில அமைச்சர்களையும் உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் முன் தங்கள் திட்டங்களை முன்வைக்க உள்ளனர்.

எட்டு மாநிலங்களின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக நிதியமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறியதாவது:-

ஒவ்வொரு மாநிலமும் அதன் தற்போதைய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயில் 15-20 சதவீதத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20 சதவீத ஜிஎஸ்டி வருவாய் இழப்பு நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமையாக சீர்குலைக்கும். மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இது வருவாய் நிலையாகும் வரை மேலும் நீட்டிக்கப்படலாம்.

இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News